லேபிள்கள்

1.7.14

முதல் 'ரேங்க்' மாணவர்களுக்கு முதல்வர் 4ம் தேதி பரிசு வழங்குகிறார்: 2, 3ம் இடம் பிடித்தவர்களுக்கு அமைச்சர் வழங்குகிறார் - தினமலர்

நீண்ட இழுபறிக்குப் பின், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, 470 மாணவர்களுக்கு, வரும், 4ம் தேதி, சென்னையில், இரு இடங்களில் நடக்கும் விழாவில், பரிசு வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த ஒருவர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பிடித்த, 19 பேருக்கு மட்டும், முதல்வர், ஜெயலலிதா, பரிசு வழங்குவார் என்றும், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் நடக்கும் விழாவில், கல்வி அமைச்சர், வீரமணி பரிசு வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நீண்ட இழுபறி:

கடந்த, மே 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. 10ம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ல் வெளியானது. வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு, சாதனை மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா, இழுபறியில் இருந்து வந்தது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், இரு முறை செய்தி வெளியானது. இந்நிலையில், தேர்வு முடிவு வெளியாகி, இரு மாதங்கள் முடியும் நிலையில், வரும், 4ம் தேதி, பரிசு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ஒருவர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பிடித்த, 19 பேர் என, 20 பேருக்கு மட்டும், முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்குவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் தேதி விழா:

இந்த விழா, 4ம் தேதி காலை, தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. அதேநாள், பகல், 2:30 மணிக்கு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் நடக்கும் விழாவில், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த, 450 மாணவர்களுக்கு, கல்வி அமைச்சர், வீரமணி பரிசு வழங்குவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நடந்த குளறுபடி:

கடந்த ஆண்டு, சாதனை மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, பெரும் குளறுபடியில் முடிந்தது. முதலில், முதல்வர் பரிசு வழங்குவார் என, அறிவிக்கப்பட்டு, பின், அப்போதைய கல்வி அமைச்சர், வைகை செல்வன் பரிசு வழங்குவார் என, மாற்றப்பட்டது. டி.பி.ஐ., வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு, வைகை செல்வனும் வராததால், பெரும் குழப்பம் ஏற்பட்டு, பெற்றோரும், மாணவர்களும், விழாவை புறக்கணித்து, புறப்படும் நிலை ஏற்பட்டது. அதன்பின், அதிகாரிகளை வைத்து, அவசரமாக, பரிசை வழங்கினர். இந்த குழப்பம், குளறுபடி குறித்து, 'தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியானதை அடுத்து, இரண்டாவது முறையாக, அனைத்து மாணவர்களையும் அழைத்து, முதல்வரே, பரிசை வழங்கினார்.

பெற்றோர் கடும் அதிருப்தி:

இதுபோன்ற நிலையில், மீண்டும், இரு இடங்களில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பதும், பரிசு வழங்கும் விழாவில் பாரபட்சம் காட்டுவதும், பெற்றோர் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர் பேட்டி:

இதுகுறித்து, மாணவி ஒருவரின் பெற்றோர் கூறியதாவது: மாணவர்கள், 'முதல்வர் கையால், பரிசு பெறப் போகிறோம்' என, மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் கடினப்பட்டு படித்து சாதித்த மாணவர்களுக்கு, முதல்வர், பரிசு வழங்கி, பாராட்டுவதே, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். அதிலும், முதலிடம் பெற்றவர்களுக்கு, முதல்வர் பரிசு வழங்குவார் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு, அமைச்சர் பரிசு வழங்குவார் என்றும், எங்களுக்கு கொடுத்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இது, மாணவர்களுக்கு, பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல்வர் நினைத்தால், 470 பேருக்கும், பரிசு வழங்க முடியும். மாணவர் மத்தியில், ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தாமல், அனைத்து மாணவர்களுக்கும், முதல்வரே, பரிசு வழங்க வேண்டும். இவ்வாறு, பெற்றோர் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக