லேபிள்கள்

1.7.14

80சி பிரிவின் கீழ் அளிக்கப்பட்டு வரும் வருமானவரி சலுகையை 2 மடங்காக அதிகரிக்க நிதி அமைச்சகம் பரிசீலனை

80சி பிரிவின் கீழ் தற்போது அளிக்கப்பட்டு வரும் வருமானவரி சலுகையை 2 மடங்காக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

சேமிப்பு குறைந்தது

தற்போதைய வருமானவரி சட்டத்தின்படி 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின் கீழ் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் செலவினங்களுக்கு 1 லட்ச ரூபாய் வரை வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வருமானவரி செலுத்துவோர் இடையே கடந்த 2008-ம் ஆண்டு 38 சதவீதமாக இருந்த சேமிப்பு கடந்த 2012-13-ம் ஆண்டு நிதியாண்டில் 30 சதவீதமாக குறைந்துபோனது. இதனால் வருமானவரி செலுத்தும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நிதி அமைச்சகம் பரிசீலனை

இந்த நிலையில், வருகிற 10-ந் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யும்போது இந்த பிரிவுகளில் அளிக்கப்படும் வரிச்சலுகை 2 லட்ச ரூபாயாக அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதிப்பீடு

இந்த சலுகையை 2 லட்ச ரூபாயாக உயர்த்தும்போது அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பதை வருவாய் துறை மதிப்பிட்டு வருவதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் இந்த 80சி பிரிவுகளில் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் வரி விலக்கு சலுகையை உயர்த்தும்படியும் கோரிக்கை விடுத்து உள்ளன.

நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பட்ஜெட்டில், இந்த சலுகை அளிக்கப்பட்டால் தற்போதைய பணவீக்கம் காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வரும் மாத சம்பளக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சூழ்நிலை உருவாகும்.

மேலும் இச்சலுகை அளிக்கப்பட்டால் ஆயுள் காப்பீட்டு பிரிமியம் செலுத்துவோர், பொதுமக்கள் சேமிப்பு நிதி, தொழிலாளர் சேமிப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரங்கள், வீட்டு கடன்களுக்கான தொகை செலுத்துதல், பங்கு பத்திர சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடுகள் பெருகி அதன் மூலம் நிதி திரட்டும் நிறுவனங்களில் பொதுமக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட்டில் இச்சலுகையை வருடத்திற்கு ரூ.1 லட்சம் என்பதில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தும்படி நேரடி வரிகள் குழுவும் கோரி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக