சென்னையில் கடந்த மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று
பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடித் திட்டம் சென்ற ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும், பல வகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை உணவு வகைகள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
முதல்–அமைச்சரின் இந்த உத்தரவை ஏற்று, பள்ளி மாணவ, மாணவிகளின் தேவையை உணர்ந்து, தமிழக சமூக நலத்துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களில் கலவை சாதம்– மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளனர். இதற்காக சத்துணவு பணியாளர்களுக்கும் கலவை சாதம் செய்வது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூகநலத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:–
உணவு வகையில் மாற்றம்
கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வகையான உணவு சத்துணவாக வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டுவர முதல்– அமைச்சர் ஆணையிட்டார். அதன்படி புதிய வகை கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை வினியோகம் துவக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி முதல் மற்றும் 3–வது வாரம் ஒரு வகையான உணவு பட்டியலும், 2–வது மற்றும் 4–வது வாரத்தில் மற்றொரு வகை உணவு பட்டியலின் அடிப்படையில் உணவு வழங்கப்படுகிறது.
உணவு பட்டியல்
குறிப்பாக முதல் மற்றும் 3–வது வாரத்தில் திங்கட்கிழமை வெஜிடபிள் பிரியாணி மற்றும் மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டைக்கடலை புலாவ் மற்றும் தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பார் சாதம் மற்றும் வேக வைத்த முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை அல்லது கீரை சாதம் மற்றும் மசாலா முட்டை மற்றும் மிளகாய் பொடி தூவி வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்படுகிறது.
2–வது மற்றும் 4–வது வாரத்தில் திங்கட்கிழமை சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்). வெங்காயம் தக்காளி மசாலா முட்டை, செவ்வாய்க்கிழமை மீல் மேக்கர் மற்றும் காய்கறி கலந்த வெஜிடபிள் சாதம், மிளகு முட்டை புதன்கிழமை புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், சுண்டல், தக்காளி முட்டை, வெள்ளிக்கிழமை சாதம், காய்கறியுடன் சாம்பார், வேக வைத்த முட்டை மற்றும் வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்படுகிறது.
சமையல் கலை வல்லுநர்கள்
அனைத்து மாவட்டங்களிலும் முன்னோடி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அனைத்து வட்டாரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் பல்வகை உணவு தயாரிப்பதற்காக, சென்னையிலிருந்து 20 சிறந்த சமையல் கலை வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, 32 மாவட்டங்களுக்கும் அவர்களை அனுப்பி சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ– மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதுடன், ஆர்வமாகவும் பள்ளிகளுக்கு வருகின்றனர். சென்னையில் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டம் சிறப்புடன் நடந்து வருகிறது.
54 லட்சம் மாணவர்கள் பயன்
இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 42 ஆயிரத்து 619 பள்ளிகளைச் சேர்ந்த 54 லட்சத்து 62 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். திருச்சி, திருப்பூர் மாவட்டத்தில் முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் கேரள, கர்நாடக, ஆந்திரா, பீகார் உட்பட 11 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் தமிழகம் வந்து பார்வையிட்டு பாராட்டி சென்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கலவை உணவு சாப்பிடும் மாணவர்கள் கூறும் போது, “மதியம் வழங்கும் கலவை சாதம் நன்றாக இருக்கிறது. எங்களுக்கு நன்றாக பிடித்திருக்கிறது’’, என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக