லேபிள்கள்

20.9.14

பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் அரசியல் சிபாரிசு இல்லையா:ஐகோர்ட் அதிருப்தி

உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நடக்கவில்லை,' என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் விசாரணை அறிக்கையில், மதுரைஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தியடைந்தார்.
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, தகுதியானவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல் மேலுார் கல்வி மாவட்ட அலுவலக நேர்காணலில் பங்கேற்றேன். நான் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எனக்கு கூடுதல் தகுதி இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை.

மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் மேற்கண்ட பணி நியமனங்கள் குறித்த பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலர்களிடம் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரினேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் பட்டியல் வழங்கினர்.அதில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு 28 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச் செயலாளர், தொட்டியம் மாவட்டச் செயலாளர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியே பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.பணி நியமனம் சட்டவிரோதம் என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சி.வி.சங்கர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என 2013 செப்.,17 ல் தனி நீதிபதி உத்தரவிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது.சி.வி.சங்கர் தாக்கல் செய்த அறிக்கை:வாட்ச்மேன் உட்பட 5000 பணியிடங்கள் நிரப்ப, தேர்வு நடந்துள்ளது. 

உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்டேன். அப்போதைய கல்வி அதிகாரி சாந்தமூர்த்தி, 'பல்வேறு சிபாரிசு கடிதங்கள் வந்தன.சிபாரிசு அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செய்யவில்லை. தகுதி அடிப்படையிலும்தேர்வு செய்துள்ளோம்,' என்றார். அரசியல்வாதிகளிடமிருந்து சிபாரிசு கடிதங்கள் வந்ததை உறுதி செய்துள்ளார்.சசிக்குமார் என்பவருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் கே.ராஜூ, கண்ணன் என்பவருக்கு தொட்டியம் மாவட்டச் செயலாளர் கொடுத்ததாக கூறப்படும் சிபாரிசு கடிதங்களை காணவில்லை.அலுவலக உதவியாளர் மாயன்,'பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து 2012 ஜூலை 26 ல் டெலிபோன் தகவல் வந்தது. அந்த சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டனர்,' என தெரிவித்ததை விசாரித்தேன். அவர்,'மறுமுனையில் யார் பேசியதுஎன தெரியவில்லை. குறிப்பேட்டில் பதிவு செய்ய முடியவில்லை,' என்றார்.இயக்குனர் அலுவலகத்திலிருந்து,'பணி நியமனமுறை, சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி இருக்க வேண்டும்,' என போனில் தெரிவித்துள்ளனர்.பணி நியமனம் முறையாக நடந்துள்ளது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நியமனம் நடந்துள்ளதாக கூற முடியாது. இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி: 

விசாரணை அதிகாரி, சரியாக விசாரிக்கவில்லை. இது, ஏற்கனவே அதிகாரிகள் கூறியதை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. பல கடிதங்கள் மாயமாகியுள்ளன. சிபாரிசு கடிதங்கள் கொடுத்தவர்கள், அதை வாங்கியவர்களிடம் விசாரிக்கவில்லை.சிபாரிசு அடிப்படையில் மட்டும் நியமனம் நடக்கவில்லை; தகுதி அடிப்படையிலும் கூடநியமனம் நடந்துள்ளது என்பதற்கு என்ன அர்த்தம்?ஏற்கனவே ஐ.பி.எஸ்., அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடலாம் என கோர்ட் கருதியது. அரசுத் தரப்பின் விருப்பத்திற்கேற்ப, ஐ.ஏ.எஸ்.,அதிகாரியை நியமித்து உத்தரவிட்டேன். விசாரணை அறிக்கையை பார்க்கையில், இந்த கோர்ட்டிற்கு திருப்தி ஏற்படவில்லை.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்: விசாரணை அறிக்கையை, தலைமைச் செயலாளரின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். அரசுத் தரப்பில் விளக்கம் பெற அவகாசம்தேவை என்றார்.நீதிபதி,'செப்.,22 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக