சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரிதான் மிக முக்கிய வருவாயாகும். நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று வரை ரூ.525 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
30–ந்தேதிக்குள் இலக்கை எட்டுவோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் நம்பிக்கையுடன் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுமார் 1100 தனியார் பள்ளிகள் சென்னையில் செயல்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவற்றிற்கு சொத்து வரி விதித்தால் ரூ.80 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு 1994–ம் ஆண்டில் இருந்து சொத்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்தோடு செயல்படுவதால் மாணவர்களிடம் அதிக கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிக்கிறது. அதனால் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிப்பதில் தவறு இல்லை என்று மாநகராட்சி அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதிக்கப்படும். ஆனால் இது கொள்கை முடிவாகும்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்கு சொத்து வரிதான் பெரிய வருவாய் ஆதாரமாகும். சென்னையில் உள்ள 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க அரசு அனுமதி அளித்தால் ரூ.80 முதல் ரூ.100 கோடி வரை சொத்து வரியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு இருப்பதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாநகராட்சியின் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தால் வருவாய் அதிகரிக்கும். மேலும் பல கட்டமைப்பு வசதிகளை பெருக்க முடியும் என்றனர்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:–
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு உள்ளது. வணிக ரீதியாக நடத்தப்படும் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிப்பதில் என்ன தவறு என்று கேட்டால் கல்வியை தனியார் நிறுவனங்கள் வியாபாரமாக நடத்துவதை அரசே அங்கீகரிப்பதாகும்.
வணிக நோக்கத்தில் செயல்படும் பள்ளிகளை அரசுதான் தடுத்து நிறுத்த வேண்டும். அதை வரைப்படுத்துவதை விட்டுவிட்டு சொத்து வரி விதித்தால் வியாபாரத்தை அனுமதிக்கும் செயலாகும்.
மேலம் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதித்தால் அது மாணவர்களின் பெற்றோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவதாகும். உடனே இன்னும் கூடுதலாக கட்டணத்தை வசூலிக்க தொடங்குவார்கள். எனவே தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக