லேபிள்கள்

23.3.15

தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - நாகை மாவட்ட கலெக்டர் அதிரடி

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் அரசு பள்ளியில், கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டுஷீலா அனுமதிக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் பட்டுஷீலா, ஆசிரியர்கள் ஆனந்த் மற்றும் பரமநாதன் ஆகியோரை மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

100% தேர்ச்சிக்காக மாணவர்களின் வாழ்க்கைக்கு உலை வைத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்ட, 6 மாணவர்களை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழபெரும்பள்ளத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 42 மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தனர். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய அரசு பொது தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர். அப்போது சாந்தி, கனிதா, காயத்ரி, ரேணுகா, தமிழ்ச்செல்வி மற்றும் மாணவர் சுபாஷ் ஆகிய 6 பேரை பள்ளி தலைமை ஆசிரியை பட்டு ஷீலா அற்புதராணி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் தலைமை ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, "இப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி காண்பிக்க வேண்டுமென்றே 6 மாணவர்களை தேர்வு எழுதி அனுமதிக்கவில்லை. இம்மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். தேர்வு அன்று வழங்குவார்கள் என்று மாணவர்கள் பரீட்சை எழுத சென்றனர். ஆனால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் வேண்டும் என்று அனுப்பி விட்டனர்" என்றனர்.இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறும்போது, மாணவர்களின் வருகை பதிவு 75 சதவீதத்திற்கும் கீழ் இருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றனர்.அதற்கு பெற்றோர் தரப்பில் தெரிவிக்கும் போது, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் வீடுகளும் பள்ளிக்கு மிக அருகில்தான் உள்ளது. மாணவர்களும் அடிக்கடி விடுமுறை எடுப்பதில்லை. எனவே வருகை பதிவு குறைவாக உள்ளது என்பது காரணம் இல்லை என மறுத்தனர்.இச்சம்பவம் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியிடம் கேட்ட போது, இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், அப்பள்ளியில் படிக்கும் 2 பேர் தொடக்கம் முதல் பள்ளிக்கு வரவில்லை என்பதும், மீதி உள்ள மாணவர்கள் டிசம்பர் மாதத்திற்கு பின் வரவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என எழுதி கொடுத்துள்ளதும் தெரியவந்தது. ஆனாலும் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, இது தொடர்பாக மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்தநிலையில், தலைமை ஆசிரியர் பட்டு சீலா ராணி, ஆசிரியர்கள் ஆனந்த், பரமநாதன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நாகை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக