லேபிள்கள்

24.3.15

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு

*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா?

*பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?

*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?


ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது.அந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் இந்த ஆசிரியர்களை பணத்துக்காக, பணியிட மாற்றத்துக்காக அரசிடம் கையேந்த வைக்கக் கூடாது. அப்படி ஒரு நிலைமைதான் தமிழகத்தில் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு பதில் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் வலுவான, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே இருக்குமே தவிர.. அதை சிதைப்பதாக இருக்காது. 

அதனால்தான் அந்த காலத்திலேயே குருவுக்கு பிறகுதான், தெய்வத்தை வைத்தார்கள்.ஆனால், ஆசிரியர்களின் நிலைமை என்ன? அடிப்படை உரிமைக்காக போராட்டம் நடத்துகின்றனர். அப்படியும் அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 28 சங்கங்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ அமைப்பை உருவாக்கி, போராட்டத்தை நடத்துகின்றன. அவர்களை அரசு அழைத்து பேசவில்லை. இதனால், ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வீணாகப் போன அரசு அழைப்பு: ஜாக்டோ குழுவினர் தங்கள் கோரிக்கை குறித்து பேசுவதற்காக முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் விருப்பம் தெரிவித்திருந்தார். 

ஜாக்டோ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களில் 15 பேர் மட்டும் முதல்வரை சந்திக்க தலைமைச் செயலக போலீசார் அழைத்து சென்றனர். சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக ஆசிரியர்கள் முதல்வர் அறையின் முன்பு காத்திருந்தனர். அவர்களை உட்கார வைக்காமலே காத்திருக்கவும் வைத்தனர் அதிகாரிகள். பல மணி நேர காத்திருப்புக்கு பிறகு ஆசிரியர்களை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்க மறுத்துள்ளார். அதுவே போராட்டத்தின் வேகத்தையும் கூட்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக