லேபிள்கள்

26.3.15

பிளஸ் 2 கணிதத்துக்கு மறுதேர்வு ஏன் கூடாது? கல்வி துறை விளக்கம் அளிக்க உத்தரவு

பிளஸ் 2 கணிதத் தேர்வை, மீண்டும் நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது என்பதற்கு, அரசிடம் விளக்கம் பெறுமாறு, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவி, ரீனா என்பவர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். அவர் சார்பில், அவரது தந்தை வீரணன் என்பவர், தாக்கல் செய்த மனு:

'வாட்ஸ் அப்':

பிளஸ் 2 கணிதத் தேர்வில், வினாத்தாளை புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் அப்'பில் அனுப்பி, மாணவர்களுக்கு தெரிவிப்பதற்காக, விடைகளை பெற்றதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. சம்பவம் தொடர்பாக, கல்வித் துறையை சேர்ந்த, ஊழியர்கள் 118 பேர், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஓசூரில் உள்ள, விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மாணவர்கள் எதிர்காலம்:

பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும், அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதாக உள்ளது. வினாத்தாள் வெளியானதால், நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களை விட, குறிப்பிட்ட பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. கணித பாடத்தை பொறுத்தவரை, மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதுகுறித்து, கடந்த 22ம் தேதி, கல்வித் துறைக்கு மனு அனுப்பினேன்; கணித பாடத்துக்கான, மறுதேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. இம்மனு, நீதிபதி சிவஞானம் முன், விசாரணைக்கு வந்தது. கணித பாடத்துக்கான மறுதேர்வை நடத்த, ஏன் உத்தரவிடக் கூடாது என்பதற்கு, அரசிடம் விளக்கம் பெற, கூடுதல் பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்., 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக