திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வறையில் பறிமுதல் செய்த கத்தி, செல்லிடப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டு, ஆசிரியையை மிரட்டிய பிளஸ் 1 மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23-ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு நடைபெற்றது. அந்தப் பள்ளியில் கணினி அறிவியல் பயிலும் இரு மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருந்த மேஜையில் கத்தியும், செல்லிடப்பேசியும் இருந்தனவாம். இதைக் கண்டறிந்த தேர்வறைக் கண்காணிப்பாளரான ஆசிரியை அவற்றைக் கைப்பற்றி, பள்ளித் தலைமை ஆசிரியை மரிய கொரட்டியிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இந்த இரு மாணவர்களும் புதன்கிழமை அந்த ஆசிரியை வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் ஆசிரியை இல்லாததால், அவரது கணவரிடம் தங்களது கத்தி, செல்லிடப்பேசியைக் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, வள்ளியூர் காவல் நிலையத்தில் ஆசிரியை வியாழக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் உமா தமிழ்ச்செல்வி வழக்குப் பதிந்து, அந்த இரு மாணவர்களையும் கைது செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக