லேபிள்கள்

22.3.15

TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?- புதியதலைமுறை

திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது. 

தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? தேர்வுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர் 2012 ஆம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகின்றது. 2012 ல் இரு முறையும் 2013 அம் ஆண்டு ஒரு முறையும் தேர்வு நடந்தது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் அதில் பின்பற்றப்படும் முறைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள காரணத்தினால் 2014ஆம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பே வெளியாகாமல் இருக்க, 2015 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு நேரமும் நெருங்கி வருகிறது. 


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதாவிடம் விளக்கம் கேட்டபோது நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதாகவும், இந்தாண்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விளக்கமேதும் கொடுக்கப்படவில்லை. இதனிடையே, இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், வெயிட்டேஜ் முறை நீக்கப்பட வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக