லேபிள்கள்

30.6.16

5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு

மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் நோக்கத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்படுவதால், அவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் வகையில் கல்விக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 5-ஆம் வகுப்பு வரை தங்களது தாய் மொழியில் அல்லது பிராந்திய மொழியில் பயிற்றுவிக்கலாம். இரண்டாவது மொழிப் பாடமாக ஆங்கிலம் இருக்கும்.


இதுதவிர, பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை சம்ஸ்கிருத மொழியைக் கற்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

உயர் கல்வியில், சர்வதேச தரத்துக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 சதவீதம், கல்வித் துறையில் முதலீடு செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்விச் சேவையைத் தொடர்வதை ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.

இதுதவிர, உயர்நிலை வகுப்புகளில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேசிய அளவிலான பொதுவான பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். மற்ற பாடங்களை, மாநில அரசுகளின் விருப்பத்துக்கு விட்டு விடலாம் என்று அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக