லேபிள்கள்

1.7.16

கல்வித் துறையில் குளறுபடி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே பிளஸ் 2 வரை படித்த திருப்பூர் மாணவி

திருப்பூரில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மாணவி, 11-ஆம் வகுப்பில் சேர்ந்து, பின்னர் பிளஸ் 2 தேர்வு எழுதியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

பள்ளிக் கல்வித் துறையில் நடைபெற்றுள்ள இந்தக் குளறுபடி குறித்து இயக்குநர் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாநகரைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மனையியல் பாடப் பிரிவில் பயின்ற ஒரு மாணவி, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வை எழுதியுள்ளார். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாக, மாணவிகளுக்கான மாற்றுச் சான்றிதழ் தயாரிப்பதற்காக அவர்களின் விவரங்களை இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தயாரித்துள்ளனர். அப்போது இந்த மாணவி, 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் பாடத்தில் 34 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகே கல்வித் துறைக்கு இந்தக் குளறுபடி தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவியின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், தேர்வுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் பேரில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம் இப்போது வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவியைப் பள்ளியில் சேர அனுமதித்த அப்போதைய தலைமை ஆசிரியர், அந்த ஆண்டிலேயே இடமாறுதலில் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். இருப்பினும், 11-ஆம் வகுப்பில் சேரத் தகுதி இல்லாத அந்த மாணவி, எப்படி கல்வித் துறை அதிகாரிகளின் பல்வேறு ஆய்வுகளைக் கடந்து 11, 12-ஆம் வகுப்புகளைப் பயின்று, பொதுத் தேர்வும் எழுதியுள்ளார் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவி, 11, 12-ஆம் வகுப்பில் படித்ததாகக் கூறப்படும் விவகாரம் இதுவரை தனது கவனத்துக்கு வரவில்லை என்றும் அப்படி நடைபெற்றிருந்தால் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். அதேநேரம், முதன்மைக் கல்வி அலுவலர் முருகனோ, இது தொடர்பான அனைத்து விவரங்களும் எனது உயர் அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அந்த விவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவியையும், அவரது பெற்றோரையும் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வரவழைத்த அதிகாரிகள், தோல்வி அடைந்த விவகாரத்தை மறைத்தது நாங்கள்தான் என்றும் இதற்கு முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம் என்றும் வெள்ளைத் தாளில் எழுதி வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக