தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் மறைமுகமாக கட்டாயமாக்கும் பணி நடக்கிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு
ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில், அடையாள அட்டை வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகள் கல்வி பயில வசதியாக ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
ஐடிஐ, நர்சிங் உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர்களுக்கு ரூ.1,250, மாணவிகளுக்கு ரூ.1,750, விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கு ரூ.1,450, மாணவிகளுக்கு ரூ.1,950, பொறியியல் படிப்பிற்கு ரூ.2,250, மற்றும் ரூ.2,750, விடுதிகளில் தங்கினால் மாணவர்களுக்கு ரூ.4,250, மாணவிகளுக்கு ரூ.4,750 வழங்கப்படுகிறது. இவை தவிர டிகிரி படிப்பவர்கள், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விஏஓ, ஆர்ஐ, ஆகியோரிடம் கையொப்பம் பெற்று சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாரிடம் கொடுத்தால் நேரடியாக பணம் கொடுக்கப்படும்.
இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப், ஆதார் எண் இணைக்கப்பட்டு, குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திலும் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சமுக பாதுகாப்புத் திட்டத்தில் இனிமேல் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம். இதனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் போன்றவைகளை ஒப்படைக்க வேண்டும். இனிமேல் இசிஎஸ் மூலமே ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்’ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக