லேபிள்கள்

28.6.16

மாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்? : பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்

மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின் படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என,
பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

 தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டு உள்ளது என, டில்லியில் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, நேரடியாக அழைக்கப்பட்டார். 

விளக்கம்

 தமிழகத்தில் கல்வித்தரம் குறைய என்ன காரணம்; மத்திய அரசின் திட்டங்களை கிடப்பில் போட்டு, நிதியை சும்மா வைத்திருந்தது ஏன்; தொழிற்கல்வி வகுப்புகள் துவங்காதது ஏன் என, சரமாரியாக கேள்வி கேட்டு , எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்றுள்ளனர். இதில், ஒரு கேள்விக்கு வயது தான் பிரச்னை என்று, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா பதில் அளித்துள்ளார். 

அந்த கேள்வி: தமிழகத்தில், 4,401 தனியார் பள்ளிகள், 5,879 அரசு பள்ளிகள், 1,771 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம், 12 ஆயிரத்து, 542 உயர்நிலை பள்ளிகள் உள்ளதாக கணக்கு கொடுத்துள்ளீர்கள். இவற்றில், நடுநிலை பள்ளிகளில், 8ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பில் சேருவோர் எண்ணிக்கை குறைவாக, அதாவது, 65.30 சதவீதமாக மட்டுமே உள்ளதே ஏன்? 

இந்த கேள்விக்கு, செயலர் சபிதா தரப்பில் அளித்துள்ள பதில்: தமிழகத்தில், 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் பள்ளியின் நுழைவு வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். அதனால், 9ம் வகுப்பில் நுழைவோரின் வயது, 13 மற்றும் அதற்கு மேல் என, கணக்கில் எடுக்க வேண்டும். ஆனால், தேசிய அளவிலான கணக்கெடுப்பில், 14 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களை எண்ணியுள்ளதால்,தமிழக மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

சிக்கல்

 இந்த பதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நுழைவு வகுப்பு என்று பள்ளிக்கல்வி செயலர் சொல்வது 1ம் வகுப்பா; எல்.கே.ஜி.யா., என்பதே அந்தக் குழப்பம். ஏனென்றால், தமிழகத்தில் மட்டும் தான், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மூன்றரை வயதான குழந்தைகள், எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் சட்டப்படி, நுழைவு வகுப்பு என்பது, 1ம் வகுப்பு. அதனால் தான், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குவதில் பல ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது. மத்திய அரசுக்கு சபிதா அளித்துள்ள விளக்கத்தின் படி, நுழைவு வகுப்பு, எல்.கே.ஜி., என்றால், அதற்கு வயது வரம்பு, மூன்றரை வயதாகும். எனவே, இந்த பதிலால் பள்ளிக்கல்வி ஆசிரியர்களும், கல்வியாளர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக