மெட்ரிக். பள்ளிகள் ஆய்வாளர் முருகன் தகவல்
வேலூரில் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்ட செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியின் அனைத்து மாணவர்களும் வேறு பள்ளிகளில் சேர்க்கப்படவுள்ளனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரம் கடந்த வாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. இப் பள்ளியில் எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை 366 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இவர்கள், அருகில் உள்ள 3 தனியார் மெட்ரிக். பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பான, பெற்றோர் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், ‘‘தங்கள் பிள்ளைகளை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் பரிந்துரை செய்த பள்ளிகளைத் தவிர வேறு பள்ளிகளில் சேர ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர். மேலும், அந்தப் பள்ளியில் கட்டணம் மற்றும் புத்தகங்கள் வேறுபாடு குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் முருகன் கூறும்போது, ‘‘செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் நிரந்தரமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். செயின்ட் ஜான்ஸ் பள்ளியின் கல்விக் கட்டணத்துக்கு இணையாக செயல்படும் 3 தனியார் பள்ளிகளை நாங்கள் தேர்வு செய்தோம்.
ஆனால், சில பெற்றோர் வேறு சில தனியார் பள்ளிகளில் சேர விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர உடனடியாக ஏற்பாடு செய்துள்ளோம். செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் மாணவர்கள் முதல் பருவத்துக்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
எனவே, புதிய பள்ளியில் சேரும்போது முதல் பருவத்துக்கான கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது பருவ கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால் அதை பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சில மாணவர்கள் தனியார் பள்ளிகள் இல்லாமல், 5 அரசுப் பள்ளிகளிலும் சேர்ந்துள்ளனர். 8-ம் வகுப்பு வரை பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் இல்லை. எனவே, பள்ளியின் அங்கீகாரப் பிரச்சினை ஏற்பட்டதும் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
பெற்றோரின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை (இன்று) ஒருங் கிணைப்புக் கூட்டம் நடைபெறும். இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றுள்ளனர்’’ என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக