லேபிள்கள்

11.6.17

சென்னை ஐகோர்ட் உத்தரவு ரத்தாகுமா? 'நீட்' வழக்கை 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, சி.பி.எஸ்.இ., எனப்படும்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் தாக்கல் செய்த மனு மீது, வரும், 12ல் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.மருத்துவப் படிப்புகளுக்காக, நீட் எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மே, 7ல் நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழி கேள்வித் தாள்களில் வேறுபாடுகள் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த, சென்னை ஐகோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவு களை, ஜூன், 12ம் தேதி வரை வெளியிட தடை விதித்து, மே, 24ல் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.kaninikkalvi.blogspot.in
இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறை கால நீதிபதிகள் அசோக் பூஷண், தீபக் குப்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மணீந்தர் சிங், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். 'நாடு முழுவதும், 11.38 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாவிட்டால், அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்' என, அவர் வாதிட்டார்.அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை, வரும், 12ம் தேதி விசாரிப்பதாக, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறிஉள்ளதாவது:சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவின்படியே, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனையின்படியே, கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டன.

90.75 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், மீதமுள்ள, 9.25 சதவீதத்தினர் பிராந்திய மொழிகளிலும் தேர்வை எழுதியுள்ளனர்.நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள், ஆங்கிலத்துக்கும், பிராந்திய மொழிகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள கேள்வித்தாளை, 10 பிராந்திய மொழிகளில் ஒரே மாதிரியாக மொழிபெயர்த்தால், அது முன்கூட்டியே வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் தான், வேறு வேறு கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டன. உண்மையில், பிராந்திய மொழிகளை விட, ஆங்கில கேள்வித்தாள் சற்று கடினமாக வடிவமைக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் தான், 10 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

கேள்வித்தாள் வடிவமைப்பிலோ, தேர்வு நடைமுறையிலோ எந்த பாகுபாடும் இல்லை. நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக