லேபிள்கள்

17.6.17

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்து புதிய பட்டியலை 3 நாளில் வெளியிட தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

மாறுபட்ட தீர்ப்பு

முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையின்போது, அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும்போது, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் கடந்த மார்ச் 19-ந்தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு, கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு டாக்டர் ராஜேஷ்வில்சன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதாவது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உறுதி செய்தார். இதற்கு எதிராக நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவு பிறப்பித்தார்.

அரசாணை

இதையடுத்து 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு அளித்தார். இதற்கிடையில், தமிழக அரசு, முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த மே 6-ந்தேதி அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம், பிரிவு 9-ன்படி, தொலைதூர கிராமங்கள், மலைகிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது. இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும் அரசாணைகளின்படி, முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை மே 7-ந்தேதி வெளியிட்டது.

சுகாதார நிலையம்

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் பிரணிதா என்ற டாக்டர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, எளிதில் செல்ல முடியாத கடினமான பகுதி, தொலைதூரப் பகுதி, மலைப்பகுதிகளின் பணி புரியும் அரசு டாக்டர்களுக்கு மட்டுமே சலுகை மதிப்பெண் வழங்கவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்ட விதி கூறுகிறது. ஆனால், தமிழக அரசு, நகர் பகுதிகளுக்கு அருகேயுள்ள கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கடினமான பகுதி பட்டியலில் கொண்டு வந்து கடந்த மே 6-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால், முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்காக மொத்தம் உள்ள 1,066 இடங்களில், 999 இடங்கள் அரசு டாக்டர்களுக்கே ஒதுக்கப்பட்டு விடுகிறது. எனவே, இந்த அரசாணை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மாநில அரசின் அதிகாரம்

இந்த வழக்கை நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9(4)ன்படி, தொலைத்தூர கிராமங்கள், மலைகிராமங்கள், கடினமான பகுதிகளை வரையறை செய்து, அங்கு பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது.

அதன்படி தொலைதூரம் மற்றும் கடினமான பகுதி எது? என்பதை மாநில அரசே வரையறை செய்து நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், 10 முதல் 30 சதவீதம் கூடுதலாக சலுகை மதிப்பெண் வழங்கலாம்.

ஆனால் தமிழக அரசு தொலைதூரம் மற்றும் கடினமான பகுதிகள் என்ற வரையறைக்குள், 1,747 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை கொண்டு வந்துள்ளது.

மதுரை ஒத்தக்கடை

அதுமட்டுமல்ல, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்து அரசாணை பிறப்பித்து, அதன் அடிப்படையில் தகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், தொலைதூர, கடினமான கிராமம் என்ற பட்டியலில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையம் இடம் பெற்றுள்ளது. இந்த ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையம், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மிக அருகில் உள்ளது. இது எப்படி தொலைதூர கிராமம் என்று கூற முடியும்? கிராமங்களை வரையறை செய்யும்போது தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தனது மனதை முழுமையாக செலுத்தவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

அரசாணை ரத்து

எனவே, தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்து தமிழக அரசு கடந்த மே 6-ந்தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்கிறோம். அந்த அரசாணையைப் பின்பற்றி கடந்த மே 7-ந்தேதி வெளியிடப்பட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான தகுதிப்பட்டியலில் ஒரு பகுதியை ரத்து செய்கிறோம்.

அதாவது, பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில், மலைப்பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவத்துறை இயக்குனரகம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லும். மற்றவர்களது சேர்க்கை செல்லாது.

புதிய பட்டியல்

எனவே, தொலைதூர கிராமங்கள், கடினமான பகுதிகள் உள்ளிட்டவைகளை மீண்டும் வரையறை செய்து, அதன் அடிப்படையில், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் புதிதாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக