கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்பு சேர்க்கைக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆறு இடங்களை மாணவியரும், ஏழாவது இடத்தை மாணவரும் பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும், 21 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில், 2017 - 18ம் ஆண்டு சேர்க்கைக்கு, மே, 12 முதல் ஜூன் 4 வரை மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
முதல் 3 இடங்கள்தொடர்ந்து, 200 மதிப்பெண்களுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை பல்கலை துணைவேந்தர் ராமசாமி நேற்று வெளியிட்டார். அதில், நாமக்கல் மாணவி கிருத்திகா, 200 'கட் ஆப்' மதிப்பெண்களுடன் முதலிடமும், கோவை மாணவி கீர்த்தனா இரண்டாம் இடம், சேலம் சோபிலா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். அடுத்த மூன்று இடங்களையும் மாணவியரே பிடித்துள்ளனர்.
கரூர் மாணவர் பாலாஜி, 199.75 மதிப்பெண் பெற்று ஏழாவது இடம் பிடித்துள்ளார். தவிர, புதுக்கோட்டையைச் சேர்ந்த திருநங்கை ராஜேஷ் என்பவரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2017 - 18ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, 53 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 21 ஆயிரத்து, 15 மாணவர்கள், 28 ஆயிரத்து, 14 மாணவியர் மற்றும் திருநங்கை ஒருவர் என, 49 ஆயிரத்து, 30 பேர் கட்டணம் செலுத்தி சமர்ப்பித்துள்ளனர்.
பொதுப்பிரிவினரில், 45 ஆயிரத்து, 576 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் பிரிவில், 1,780 பேர், முன்னாள் ராணுவத்தினர், 373, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், 13, விளையாட்டில், 349, மாற்றுத்திறனாளிகள், 103 பேர் என ஒவ்வொரு பிரிவிலும், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
37.5 சதவீதம்
இதில், 199 'கட் ஆப்' மதிப்பெண்களுக்கு மேல், 100 பேரும், 198.5க்கு மேல், 200 பேர், 198.25க்கு மேல், 300 பேர், 194க்கு மேல், 3,000 பேர், 186க்கு மேல், 10 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்தாண்டை விட, 37.5 சதவீதம் பேர் இவ்வாண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்கனவே அறிவித்ததுபோல், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும், 16ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரையும் நடக்கிறது.
இவ்வாண்டு, குடியாத்தம், திருவண்ணாமலையில், தலா, ஒன்று என, புதிதாக இரு வேளாண் கல்லுாரிகள் வரவுள்ளன. அதேபோல், தற்போது, அனுமதி பெற்று இயங்கும் நான்கு கல்லுாரிகளில் கட்டமைப்பு மேம்பாடு இல்லாததால், மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். இவ்வாறு துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
வேளாண் படிப்பில் ஆர்வம்
!
புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை ராஜேஷ் கூறுகையில், ''வேளாண்மை படிப்பை தேர்வு செய்யவுள்ளேன். தொடர்ந்து, அரசுத் துறையில் நுழைந்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன். விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை வீட்டில் பெற்றோரும், பள்ளியில் ஆசிரியர்களும் தன்னம்பிக்கை அளித்து படிக்க வைத்தனர்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக