தார், பான் எண் இணைப்பு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
‘பான்’ என்றழைக்கப்படுகிற வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு தொடர்பான 3 அம்சங்களைக் கொண்ட விளக்கத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) நேற்று அளித்துள்ளது. அது வருமாறு:–
* ஜூலை 1–ந்தேதி முதல், ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு தகுதி படைத்த அத்தனைபேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறபோது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் அல்லது ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக பதிவு செய்ததற்கான அடையாள எண்ணை குறிப்பிட வேண்டும்.
* வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஜூலை 1–ந்தேதியன்று வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றிருக்கிறவர்கள் தங்களது ஆதார் எண்ணை வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
ரத்து இல்லை
* ஆதார் எண் பெறாதவர்களுக்கு அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கு தற்காலிகமாக விருப்பம் இல்லாதவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு பகுதியளவில் நிவாரணம் வழங்கி இருக்கிறது. அவர்களது வருமான வரி கணக்கு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக ‘பான்’ பெற விண்ணப்பிக்க...
சுப்ரீம் கோர்ட்டு மூத்த அதிகாரிகள் இதுதொடர்பாக கூறும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டு நேற்று (நேற்று முன்தினம்) பிறப்பித்த உத்தரவை சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆராய்ந்தது. அதன் பேரில்தான் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வருமான வரி நிரந்தர கணக்கு எண் ரத்து செய்யப்பட்டு விட்டால், ஒருவர் தனது வழக்கமான வங்கியில் நடவடிக்கைகளை, நிதி செயல்பாடுகளை செய்ய முடியாது. எனவேதான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அல்லது புதிதாக வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறுவதற்கு ஜூலை 1–ந்தேதி முதல் ஆதார் எண் அவசியம் ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக