நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை.
எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது.
எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக