லேபிள்கள்

17.6.17

அதிகாரிகள் தொடர் 'டார்ச்சர்'; அரசு பள்ளி ஆசிரியர் ராஜினாமா

பள்ளி முன்னேற்றத்துக்கு கருத்து தெரிவித்த ஆசிரியருக்கு, அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால், அவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அரசு மேல்நிலை பள்ளியில், சுப்புராஜ் என்பவர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது பள்ளியில், மாணவர் விகிதாச்சாரத்தை விட, ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும், எத்தனை வகுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டுமோ, அதை நிர்ணயிப்பதில்லை. அதனால், ஆசிரியர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எட்டு மாதங்களுக்கு முன், ஆசிரியர் சுப்புராஜ் உள்ளிட்ட சிலர், தலைமை ஆசிரியரிடம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், பள்ளியில் கல்வி தரத்தை உயர்த்தவும், சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.tngtfvellakovil.blogspot.in
கண்காணிப்பு கேமரா பொருத்துவது, முக்கிய பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவது, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது என, பல யோசனைகள் கூறப்பட்டுள்ளன. அதனால், தலைமை ஆசிரியருக்கும், சுப்புராஜ் உள்ளிட்ட சில ஆசிரியர்களுக்கும் இடையே, பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் சுப்புராஜ் மீது, தலைமை ஆசிரியர் தரப்பில் நெருக்கடி அதிகரித்துள்ளது. பள்ளியின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட முடியாமல், சிக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. சில மாணவியரிடம், வருகை பதிவேட்டை வைத்திருக்க சொல்லி, சுப்புராஜ் வந்தால், கையெழுத்திட அனுமதிக்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தரப்பிலும், அவருக்கு எதிராக, புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதையடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால், எட்டு மாதங்களாக பள்ளிக்கு சென்று, வருகை பதிவேட்டில் கையெழுத்திட முடியாமல், ஆசிரியர் சுப்புராஜ் திரும்பி வந்துள்ளார். இது குறித்து, செயலர், இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, புகார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அவர் பணிக்கு வரவில்லை எனக்கூறி, 'மெமோ' கொடுக்கப்பட்டு, மீண்டும் பணியில் சேருமாறு, கடந்த வாரம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இனியும் புகார் வந்தால், 'சஸ்பெண்ட்' செய்வதாக, முதன்மை கல்வி அதிகாரி கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனால், வேதனை அடைந்த ஆசிரியர் சுப்புராஜ், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இது, சக ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'இதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக