"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு
கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. இந்நிலையில், 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான கட்ஆப் தளர்வு 55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம் 57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2013--14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013--14 ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும். இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கி உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறை என, கல்வித் துறையினர் கூறுகின்றனர். சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும் 2014 ஜூனை தாண்டும்,” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக