லேபிள்கள்

10.2.14

தொடக்க, நடுநிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை: DINAMANI தலையங்கம்

கடந்த ஆண்டிற்கான (2013) "ஆசர்' கருத்துத் திரட்டல் (சர்வே), இந்தியாவின் 550 மாவட்டங்களில் உள்ள 16,000 கிராமங்களைச் சேர்ந்த
3.3 லட்சம் குடும்பங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் நேரடியாகப் பேசி, அதிலிருந்து திரட்டிய விவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் அறிக்கை இது என்பதால்தான், இந்த அறிக்கையின் முடிவுகளுக்கு ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் முக்கியத்துவம் தருகிறார்கள்.
கல்வித் தரத்தை அதிகரிக்கவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், குறிப்பாக கிராமப்புற அளவில் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து அடித்தட்டு மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு ஈர்க்கவும் மத்திய, மாநில அரசுகளால் மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதி ஒதுக்கீட்டிற்கு இணையான முன்னேற்றம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
கிராமப்புறப் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை, ஆசிரியர்களின் வருகை என்பது மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததுமான பிரச்னை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, பல வட இந்திய மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை என்பதே அரிதாக இருந்து வந்தது. வாரத்திற்கு ஒருமுறை வந்து வருகைப் பதிவேடுகளில் கையொப்பமிட்டுச் சென்றுவிடும் விபரீதப் போக்கு காணப்பட்டது. "ஆசர்' அறிக்கை இதை வெளிச்சம் போடத் தொடங்கியதுமுதல், இந்தப் போக்கு கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டைப் போலவே ஆசிரியர் வருகை 85 சதவீதமாகத் தொடர்கிறது. மாணவர் வருகையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், பெரிய அளவில் மாற்றம் இல்லை.
பள்ளியில் 6 முதல் 14 வயதிற்குள்பட்ட மாணவர் சேர்க்கை, கிராமப்புறப் பள்ளிகளில் கடந்த ஆண்டைப் போலவே 96 சதவீதமாகத் தொடர்கிறது என்பது ஆறுதலான ஒன்று. 2013ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் காணப்படும் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம், கிராமப்புறங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகி இருப்பதுதான்.
கிராமப்புறங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. கிராமப்புற மக்களின் வருவாய் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது முதல் காரணம். இரண்டாவது காரணம், அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் திறனில் மக்கள் நம்பிக்கை இழந்துவருவது. இரண்டாவது பிரச்னையை, அரசு முறையாக அணுகி மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
கடந்த ஆண்டைவிட, 2013இல் கல்விக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாகவும், தனியார் பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கைக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் அறிக்கை கூறுகிறது. அறிக்கை தரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இன்னும் இருக்கின்றன.
தொடக்கக் கல்வி நிலையிலும் சரி, நடுநிலை, உயர்நிலைக் கல்வி நிலையிலும் சரி, இன்னும்கூட கணிசமான மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை. அடிப்படை அரிச்சுவடிக் கணக்குகள் போடும் திறமைகூட பரவலாக மாணவர்களிடம் காணப்படுவதில்லை. கூட்டல் கழித்தல்கூடத் தடுமாற்றமாக இருக்கிறது. ஆங்கில வழிக் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலோருக்குத் தாய்மொழியும் தெரியவில்லை, ஆங்கிலமும் சரியாக எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியவில்லை.
ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்திக் குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறாதவர்கள் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலைமை இல்லாமல் போனதுதான் இப்படியொரு நிலைமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. நடுநிலைப் பள்ளிவரை ஆண்டுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் நிலைமைதான், இந்தச் சீர்கேட்டிற்கு அடிப்படைக் காரணம். மாணவர்களின் இடைக்கால விலகல்களைக் குறைக்கும் முயற்சியில் எடுக்கப்பட்ட குறுகிய கண்ணோட்ட முடிவு இது.
சரியாக எழுதப்படிக்க, கணக்குக் கூட்டத் தெரியாதவர்கள் எட்டாம் வகுப்புவரை பள்ளியில் படித்திருக்கிறார்கள் என்பதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? படிப்பறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு பதிலாக, படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று புள்ளிவிவரம் கொடுத்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இத்தனை கோடி ரூபாய் கல்வி வளர்ச்சிக்கு நாம் ஒதுக்கீடு செய்து என்ன பயன்? அடிப்படையே ஆட்டம் என்கிற நிலையில், உயர்கல்விச் சாலைகளால் பயனடையப் போவது பெருநகரங்களில் வாழும் வசதி படைத்தவர்களாக மட்டும்தானே இருக்க முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக