நிற்பதற்கும், பதிவேடுகள் வைப்பதற்கும் இடமில்லாமல் மாடிபடிகளுக்கு அருகில் உள்ள சிறிய இடத்தை கூட பயன்படுத்த வேண்டிய, இடப்பற்றாக்குறையின் உச்ச அவலநிலையில் கோவை மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
கோவை மாவட்ட கல்வி அலுவலகம் இடநெருக்கடியில் சிக்கி திணறிவருகிறது. இக்கல்வி அலுவலகத்தின் கீழ், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட ௨௫௨ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில், நேர்முக உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், பதிவாளர் உட்பட பிரிவுகளின் அடிப்படையில் சுமார் ௨௬ பேர் பணிபுரிகின்றனர்.
கடந்த ௧௫ வருடங்களுக்கு மேலாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள ரோட்டில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்தது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, இடப்பற்றாக்குறை மற்றும் கட்டிடத்தின் தன்மை காரணமாக எஸ்.எஸ்.ஏ., அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் கீழ் தள பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவேடுகள் வைப்பதற்கோ, மாவட்ட கல்வி அதிகாரியை சந்திக்க வரும் நபர்கள் நிற்பதற்கோ, கம்ப்யூட்டர்கள், ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைப்பதற்கோ போதிய இடம் இல்லாமல் இடநெருக்கடியில் அல்லல்படுகின்றனர். பள்ளிநிர்வாக அலுவலர் சங்க மாநிலதலைவர் பால்ராஜ் கூறுகையில், ''மாவட்ட கல்வி அதிகாரிக்கே இந்த அவலநிலை தான் என்பது வேதனைக்கு உரியது. இதுமட்டும் இன்றி, மாவட்ட மெட்ரிக் பள்ளி அலுவலகம், பள்ளி தணிக்கை அலுவலகங்களுக்கும் இதே நிலைதான். மாவட்ட கல்வித்துறைக்கு கவுண்டம்பாளையம் பகுதியில், ஒரு ஏக்கர் பரப்பளவில் இடமுள்ளது. இந்த இடத்தில், ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தை ஏற்படுத்திக்கொடுக்கலாம் ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வருவதில்லை, '' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக