லேபிள்கள்

11.5.14

குமரியில் பிளஸ்2ல் தேர்ச்சி விகிதம் குறைவு : தலைமை ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2ல் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. குமரி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 95.14 % ஆகும். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 1.11% அதிகரித்துள்ளது. இருப்பினும் அதே 6ம் இடத்தையே இப்போதும் மாநில அளவில் தக்க வைத்துள்ளது.  இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது. 
இரணியல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணதாஸ் ஆகியோர் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பளுகல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சசிதரன் தனது தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும் பாடவாரியாக 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை கொடுத்த ஆசிரியர்கள் 12 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் பேரில் முதன்மை கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு: மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் சிறப்பான நிலையை எட்டியுள்ளது. மாநில அளவில் 6ம் இடத்தில் உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதர மாவட்டங்கள் பலவற்றிலும் இதனைவிட மோசமான தோல்விகள் உள்ள போதிலும் அங்கு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டது போன்று தெரிய வில்லை. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்‘ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக