அரசு பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய காலமாற்றத்திற்கேற்ப, பெற்றோரிடம் ஆங்கில வழிக்கல்வி மோகம் அதிகரிப்பதால், ஏழ்மையான பெற்றோர் கூட, வட்டிக்கு பணம் வாங்கி, தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இதனால்,அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, பல கிராமங்களில் ,ஒரிரு மாணவர்களுடனே அரசு பள்ளிகள் ,செயல்படும் நிலை உள்ளது.
அரசு பள்ளிகளில், சரிந்துவரும் மாணவர் சேர்க்கை தடுக்கும் நோக்கில், 2011ல் ஒரு ஒன்றியத்திற்கு 5 அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்க, அரசு உத்தரவிட்டது. சில அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகளை துவங்கினர்.
இத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், கடந்த ஆண்டு, பள்ளி தலைமை ஆசிரியர் விரும்பினால், அந்த பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கி, அதன் விபரத்தை கல்வி துறைக்கு தெரிவிக்கலாம் என, அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, அதிகாரிகளின் கட்டாயத்தை தொடர்ந்து, ஒரு ஒன்றியத்திற்கு 10க்கு மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளில், ஆங்கில வழிகல்வி வகுப்புகள் துவக்கினர். அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆங்கில வழியில் 6ம் வகுப்பு துவங்க அனுமதி அளித்தனர்.
அதிகாரிகளின் உத்தரவிற்கு பணிந்து, ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில்,இவ் வகுப்புகள் பெயரளவிலே நடக்கிறது. தமிழ் வழியில் கற்பித்த ஆசிரியர்களே, ஆங்கில வழி கல்வி பாடங்களை கற்பித்தனர்.
பல பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆங்கில புலமை இன்றி, பாடம் நடத்துவதற்கு தவித்தனர். ஆங்கில வழி வகுப்பிற்கு செல்லவே, ஆசிரியர்கள் அஞ்சினர்.
இதனால், பல மாதங்களாக ,முதல் வகுப்பு மாணவர்களுக்கு, ஏ, பி,சி,டி...யே கற்பித்து வந்தனர். ஆங்கில வழி வகுப்புகளின் முன்னேற்றம் குறித்து,கல்வி துறை அதிகாரிகள் கண்காணிக்கவோ, கவனம் செலுத்தவோ இல்லை.
ஆங்கில வழி வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடர்ந்தாலும், தனியார் பள்ளி மாணவர்களிடம் உள்ள திறன், அரசு பள்ளி மாணவர்களிடம் காண முடியவில்லை. அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்பு மாணவர்களுக்கு, முழு ஆண்டு கேள்வி தாள் கூட, தமிழில் வழங்கி தேர்வு எழுத வைத்துள்ளதாக, பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
வரும் கல்வி ஆண்டிலாவது, ஆங்கில வழி கல்வியை மேம்படுத்த, கல்வித்துறை சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆங்கிலவழி கல்விக்கென தனி இயக்குனர் முதல் உதவி கல்வி அலுவலர் வரை நியமித்து, தினமும் ஒரு ஆங்கில வழி வகுப்பினை அதிகாரிகள் ஆய்வு செய்தால்,அரசின் திட்டம் பயன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக