'பி.இ.,- பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, பாலிடெக்னிக் முடித்தவர்கள், ஐந்தாவது செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆறாவது செமஸ்டர் முடிவுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பிக்கலாம்,'' என நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்துள்ளார்.டிப்ளமோ, பி.எஸ்சி., யில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்கள், இரண்டாம் ஆண்டு, பி.இ., பி.டெக்.,கில், நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று தமிழகம் முழுவதும் 34 மையங்களில் தொடங்கியது. முதற்கட்டமாக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதில், சென்னை, கோயம்புத்துார் ஆகிய இரண்டு இடங்களில், மட்டும் கூடுதலாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக், திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.ஏ., இன்ஜி., கல்லுாரி, தேனியில் தேனி கம்மவர் சங்கம் பாலிடெக்னிக், ராமநாதபுரத்தில் செய்யதம்மாள் இன்ஜி., கல்லுாரி, சிவகங்கையில் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரி, விருதுநகரில் வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றன. இதில், 23 ஆயிரத்து 500 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 525 இன்ஜி., கல்லுாரிகளில் 80 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு 564 கல்லுாரிகளிலிருந்து, இதே அளவு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான, செயலர் மாலா கூறும்போது: மாணவர்கள், ரூ.300 டி.டி., எடுத்து நேரடியாகவும், தபால் வழியே பெற விரும்புவோர், ரூ.50க்கு ஸ்டாம்ப் ஒட்டி, சுய விலாசமிட்ட கவருடன், டி.டி., எடுத்து, செயலர், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரி, காரைக்குடி 630 004, என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜூன் 5ம் தேதி வரை வழங்கப்படும். 6ம் தேதி மாலை 5 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில், அனுப்பி விட வேண்டும்.
பாலிடெக்னிக் முடித்தவர்கள், ஐந்தாவது செமஸ்டர் மதிப்பெண் பட்டியல், ஆறாவது செமஸ்டர் முடிவு வெளியிடப்பட்டவுடன், இணையத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை tndte.gov.in., என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது, இந்த வசதி செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்படும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக