லேபிள்கள்

18.12.14

10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு

கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதிமுக மாணவரணி மாநிலச் செயலர் டி.எம். ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு விவரம்:

10, பிளஸ் 2 தேர்வுக்கு நகர்ப்புற பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்கள் குறைந்தது 5 கி.மீ. தொலைவுக்குச் சென்று தேர்வு எழுத வேண்டியுள்ளது. இவ்வாறு வெகு தொலைவு தேர்வு எழுதச் செல்வதால் மாணவர்கள் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைகின்றனர். பொதுவாக நல்ல மனநிலையில் மாணவர்கள் தேர்வை எழுதும்போதுதான் கூடுதலாக மதிப்பெண் பெற முடியும். இந்த வாய்ப்பு கிராமப் புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இல்லாதால் அவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது.

அதே சமயம், தங்கள் பள்ளிகளிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர். இதனால் மாணவர்களை வேறுபடுத்தும் நிலை உள்ளது. எனவே, 10, பிளஸ் 2 தேர்வுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கடந்த அக்டோபர் 29-இல் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், வழக்கம்போல் தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு தொடங்குவதற்குள் மையங்களை அந்தந்தப் பள்ளிகளில் ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை தனி நீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக