தலைமை ஆசிரியர், பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியைகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவுக்குப் பதிலளிக்க, பள்ளி கல்வித்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆசிரியைகள் மனு: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் தாக்கல் செய்த மனு: எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீம்குமார், பாலியல் தொந்தரவு செய்து வருகிறார். இரட்டை அர்த்தப் பேச்சு; மிரட்டல்; கழிப்பறையை பூட்டி வைப்பது; இரவு நேரத்தில், மொபைல் போனில் அநாகரிகமாக பேசுவது என, தொந்தரவுகள் செய்கிறார்.
கடந்த, அக்டோபரில், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை கல்வி அதிகாரியை சந்தித்து முறையிட்டோம். அவர், எங்கள் மனுவை பெற மறுத்து விட்டார். தலைமை ஆசிரியரிடம் பேசுவதாகக் கூறினார். மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு, எங்களால் பதில் அளிக்க முடியவில்லை.
எப்படி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானீர்கள்; அதற்கு என்ன ஆதாரம்? என, மாவட்ட கல்வி அதிகாரி கேட்கிறார். எங்கள் குறைகளை பரிசீலிப்பதற்கு பதில், மற்றவர்கள் முன்னிலையில், பதில் கூற முடியாத அளவுக்கு கேள்விகளை எழுப்புகிறார். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
வழிமுறைகள் வேண்டும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, பாலியல் தொந்தரவு புகார்களை அளிப்பதற்கும், விசாரிப்பதற்கும், வழிமுறைகள் இருக்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில், அவ்வாறு இல்லை. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டால், அதைத் தீர்க்க முறையான அமைப்பு இல்லை.
எனவே, தலைமை ஆசிரியர் பீம்குமாரை, இடமாற்றம் செய்ய வேண்டும். எங்கள் புகார்களை பரிசீலித்து, தலைமை ஆசிரியருக்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
22ம் தேதி விசாரணை: மனுவை, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு, பள்ளி கல்வித் துறையிடம் இருந்து விளக்கம் பெற, அரசு பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக