தேர்வு மையத்துக்கு வரும் போது, எதிர்பாராத விதமாக, விபத்தில் சிக்கி தாமதம் ஏற்படும் மாணவர்களை, மனிதாபிமான அடிப்படையில், தேர்வெழுத அனுமதிக்குமாறு, தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும் மதிப்பீடு மையத்தின் பொறுப்பாளர் உள்ளிட்டோருக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், அனுப்பிய சுற்றறிக்கை: தேர்வு மையத்துக்கு வரும் போது, விபத்தில் சிக்கி, தாமதமாக வருகை புரியும் தேர்வர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், உண்மையை ஆராய்ந்து, தேர்வெழுத அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களாக செயல்படும் பள்ளியில் மதிப்பீட்டு பணிக்கு தேவையான அறை, தளவாடம், சுத்தமான கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்களில் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இருப்பர் என்பதால், சரியான நேரத்துக்கு உணவு இடைவேளைக்கு அனுமதிக்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில், மொபைல்போன் அனுமதிக்கக்கூடாது. கடந்த ஆண்டுகளில் விடைத்தாள் கட்டுகள் காணாமல் போனது, ரயிலில் இருந்து கீழே விழுந்தது போன்ற சம்பவங்களை தொடர்ந்து, நடப்பு ஆண்டு, விடைத்தாள்களை மதிப்பீட்டு மையத்தில் ஒப்படைக்க, தனி வாகனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடர்பாடுகள் ஏற்பட்டால், உடனடியாக இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக