மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்ககூடுதலாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 128 பேர் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ்-2 தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதுவரை, தமிழ், ஆங்கில தேர்வுகள் நடந்துமுடிந்துள்ளன. மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.மருத்துவ படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களின் மதிப்பெண்ணும், பொறியியல் படிப்பில் சேருவதற்கு இயற்பியல், வேதியியல், கணித பாடங்களின் மதிப்பெண்ணும் கட் ஆப் மார்க் கணக்கிட பயன்படும்.
இயற்பியல் தேர்வு இன்றும் (மார்ச் 10), 14-ம் தேதி கணிதம், விலங்கியல் தேர்வுகளும், 17-ம் தேதி வேதியியல் தேர்வும், 20-ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகளும் நடைபெற உள்ளன.தொழிற்கல்வி படிப்பில் சேர மதிப்பெண் கணக்கிட உதவும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய தேர்வுகளை அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளாக அரசு கருதுகிறது. ஏற்கெனவே, தேர்வின்போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் திடீர் சோதனை நடத்துவர்.இவர்கள் தவிர, மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் உள்ளிட்டோர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளும் பிளஸ் 2 தேர்வு மையங்களை ஆய்வு செய்வார்கள்.இயற்பியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம்.
128 பேராசிரியர்கள்:
அதன்படி, இந்த ஆண்டு மேற்கண்ட தேர்வுகள் நடக்கும் 4 நாட்களும், தேர்வு மையங்களை ஆய்வு செய்ய ஒரு நாளுக்கு தலா 32 பேராசிரியர்கள் வீதம் 4 நாட்களுக்கு 128 பேர் கொண்ட சிறப்பு பறக்கும் படைகளை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தனியாக சென்றோ, உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்றோ சோதனையில் ஈடுபடுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக