லேபிள்கள்

12.3.14

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ்

பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு

மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், அவர்கள் பிளஸ்–2 பட்டப்படிப்பு போன்றவற்றில் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கிட்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது சரியான நடைமுறை அல்ல. பிளஸ்–2, பட்டப்படிப்பை பொறுத்தமட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் படிப்பை முடித்து இருப்பார்கள். சில ஆண்டுகள் தேர்வு மிக எளிதானதாக இருந்து இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருந்து இருக்கும்.

ரத்து செய்ய வேண்டும்

எனவே, மதிப்பெண் வேறுபட வாய்ப்பு உள்ளது. அதே போன்று பட்டப்படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்து இருப்பார்கள். சுலபமான பாடங்களை எடுத்து படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பர்.
எனவே, பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க 5.10.2012 அன்று பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதே போன்று பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதாவது, தேர்வு செய்யப்பட்டவர்கள் பிளஸ்–2, பட்டப்படிப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றனர்?, அவர்களுக்கு கூடுதலாக எத்தனை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படுவது இல்லை. அதே போன்று இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதையெல்லாம் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீசு

இதே போன்று பாலமேட்டை சேர்ந்த மோகன், கவியரசு, தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த கணேஷ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக