சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்க தலைவர் மனோகர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உள்ளது. இந்த இயக்குனரகத்தில் இருந்து, அதிகாரிகள் நேரில் மெட்ரிக் பள்ளிகளுக்கு வந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புவர். ஆனால் தற்போது, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆசிரியர்கள், அங்கு தான் பணியாற்றுகிறார்களா என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்திற்குதான் இதற்கு அதிகாரம் உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், திடீரென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினால் இது தனியார் பள்ளி ஆசிரியர்களின் நன்மதிப்பு கெட்டு விடும். தேர்வு மையங்களில் பணியாற்றவும், விடைத்தாள் திருத்தவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை தெரிவிப்பது தவறானது. இந்த விவரங்களை மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் மூலம் பெற்றுகொள்ளலாம். எனவே, பள்ளி கல்வி இயக்குனரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். வழக்கை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து, பள்ளி கல்வி இயக்குனர், ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி வாதாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக