லேபிள்கள்

2.3.14

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரதம்

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரத்து 549 பேரும் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, வாழ்க்கைக் கல்வி, தோட்டக்கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரைதான் பணி வழங்கப்படுகிறது. இதனால், மே மாதத்தில் ஊதியம் இன்றி தவிக்கிறோம். எனவே, எங்களை பிற ஆசிரியர்களைப் போல முறையான ஊதிய விகிதத்தில் பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் தென் மண்டல அமைப்புத் தலைவர் கே.ஜெயச்சந்திர பூபதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முகமது இப்ராஹிம், செயலர் பிரபு, பொருளாளர் சுந்தர், துணைத் தலைவர் ராமசுப்பிரமணி, துணைச் செயலர் சக்திவேல், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் சி.வள்ளிவேலு தொடங்கி வைத்தார். என்.நாகராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ராமசாமி முடித்து வைத்தார். எஸ்.பகவதி நன்றி கூறினார்.
கவனத்தை ஈர்க்க ஓவியம்:போராட்டத்தின்போது தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்வர் கவனத்தில் எடுக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பெரிய பேனரில் ஓவிய ஆசிரியர்கள் வரைந்ததை பொதுமக்கள் வியப்போடு பார்த்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக