லேபிள்கள்

9.5.14

25 சதவீத இடஒதுக்கீடு: கால அட்டவணைதான் தீர்வு

எந்த ஒரு சீரிய திட்டம் என்றாலும் சரி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதோடு, அதன் உன்னதமான நோக்கம் நிறைவேறிவிடுவதில்லை. அதை உணர்வு மாறாமல் செவ்வனே நிறைவேற்றுவதில்தான் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில், நாடு முழுவதிலும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுமே கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்தான் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டமாகும். இந்த சட்டத்தை அசகு பிசகு இல்லாமல், முழுமையாக நிறைவேற்றினால், கல்வி வளர்ச்சியில் நிச்சயமாக சிகரத்தைத் தொட்டுவிடலாம்.
2010–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத்தின்கீழ், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் அரசு பள்ளிக்கூடங்கள் இல்லாமல், தனியார் பள்ளிக்கூடங்கள்தான் இருக்கிறது என்ற நிலை இருந்தால், சமுதாயத்தில் நலிவடைந்த குழந்தைகள், அந்த தனியார் பள்ளிக்கூடங்களில் படித்துக்கொள்ளலாம், அந்த தனியார் பள்ளிக்கூட கட்டணத்தை அரசே செலுத்திவிடும். இதற்காக அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள் அல்லாத மற்ற அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களை இத்தகைய மாணவர்களுக்கு ஒதுக்கி வைத்து இருக்கவேண்டும். பல இடங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள்தான் இருக்கின்றன, அந்த பள்ளிக்கூடங்களில் இத்தகைய மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லையே என்பதுதான் நெருடலாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 56 ஆயிரத்து 557 அரசு பள்ளிக்கூடங்கள் பரவலாக இருக்கின்றன. ஏழை மாணவர்கள் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் 330 நகர் பகுதிகளில் உள்ள 3,890 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களில் கல்விபெற தகுதியுடையவர்கள். இந்த பள்ளிக்கூடங்களில் 58 ஆயிரத்து 619 ஏழை மாணவர்களுக்கு கடந்த ஆண்டு இடம் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், 2,600 பள்ளிக் கூடங்களில், 23 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு மட்டுமே கடந்த ஆண்டு இடம் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாக எய்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து, அதற்காக மாணவர்கள் சேர்க்கைக்கான காலஅட்டவணையையும் வெளியிட்டது.
இந்த அட்டவணையின்படி, கடந்த 3–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கி 18–ந் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். 23–ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை வெளியிடவேண்டும். ஆனால், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூட சங்கம் இந்த ஆண்டு தங்கள் பள்ளிக்கூடங்களில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக அவர்கள் சொல்லிய காரணங்களும் சரியாகத்தான்பட்டது. இத்தகைய மாணவர்களை சேர்த்த பள்ளிக்கூடங்களுக்கு, அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை கடந்த 2 ஆண்டுகளாக அரசாங்கம் தரவில்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இந்த சட்டத்தை சுட்டிக்காட்டி ஒவ்வொரு வகுப்புக்கும் 5 செக்ஷனுக்குமேல் தொடங்கக்கூடாது, ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்களுக்குமேல் சேர்க்கக்கூடாது என்று விதிகளை வகுக்கும்போது, கல்வி கட்டணத்தைத்தராவிட்டால் நாங்கள் எப்படி பள்ளிக்கூடத்தை நடத்துவது என்று சொன்னார்கள். கல்வித்துறையும் உடனடியாக அவர்களை அழைத்துப்பேசி, இந்த தொகை மத்திய அரசாங்கம், மாநில அரசுக்கு தரவேண்டிய தொகை. அவர்களுக்கு எழுதியிருக்கிறோம். இன்னும் 3 மாதங்களுக்குள் மத்திய அரசாங்கம் தரவில்லையென்றால், தமிழக அரசு தரும் என்று உத்தரவாதம் அளித்ததும், அதை ஏற்று உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்குகிறோம் என்று சங்கம் அறிவித்ததும் பாராட்டுக்குரியதாகும்.
எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க, எப்படி 25 சதவீத இடஒதுக்கீட்டுக்காக காலஅட்டவணை கல்வித்துறையால் வெளியிடப்பட்டதோ அதுபோல, கல்விக்கட்டணத்தை மத்திய அரசு திருப்பித்தரவும் காலஅட்டவணை வகுத்து வெளியிடவேண்டும். இதேபோல, சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கான கட்டணத்தையும் அரசு காலஅட்டவணை போட்டு குறித்த கலத்தில் வழங்கவேண்டும். இது மாணவர்களின் கல்வி விஷயம். ஏழை மாணவர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக வழங்கும் உதவியை காலத்தே செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். காலத்தே செய்யும் பயிர்தான் செழிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக