லேபிள்கள்

9.5.14

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமைகளுக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர், வெங்கடேசன் என்பவர், தாக்கல் செய்த மனு: பெரும்பாலும், தனியார் பள்ளிகள் தான், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை நடத்துகின்றன. இந்தப் பள்ளிகள் எல்லாம், கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால், பெற்றோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சமச்சீர் கல்வி, தரமான கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டாலும், தனியார் பள்ளிகள், தாங்களாகவே பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்கின்றன. எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு கூட, சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். அரசு பள்ளிகளில், ஆறாவது வயதில் இருந்து தான் குழந்தைகளை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில், மூன்று வயதில் இருந்தே குழந்தைகளை சேர்க்கின்றனர்.
குழந்தைகளின் மனநிலை, உடல்தகுதி மேம்பாட்டுக்கு, நடவடிக்கை எடுக்க, அரசு தவறி விட்டது.

சென்னை மாநகராட்சி மேயர், 25 மழலையர் பள்ளிகளை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். எனவே, இந்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் சுதாகர், சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ஜிம்ராஜ் மில்டன் ஆஜரானார். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க, அரசுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக