கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஆளுமைத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்று ஆகியவற்றை விண்ணப்பித்தவுடன் அவை பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளத்திலேயே அந்தச் சான்றிதழ்கள் வெளியிடப்படும்.
அவ்வாறு வெளியிடப்படும் சான்றிதழ்கள், டிஜிட்டல் முறையிலான கையெழுத்துடன் இணையதளத்தில் வெளியாகும்.
அவற்றை பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் சேவை மையங்கள் மூலம் இந்தச் சான்றிதழ்களை மக்கள் பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிகாரிகள் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ள சான்றிதழ்களை சில கல்வி நிறுவனங்கள் ஏற்பதில்லை என்ற புகார்கள் அரசுக்கு வந்துள்ளன.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் எழுதியுள்ள கடிதம்:
தகவல் தொழில்நுட்பத் துறை சட்டம் 2000-ன்படி, டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ள சான்றிதழ்களும் செல்லுபடியாகும். அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். பேனாவில் கையெழுத்திட்ட சான்றிதழ்கள்தான் செல்லுபடியாகும் என்று மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.
இதனை பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து இடங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக