நூறு சதவீத தேர்ச்சியினை பெறவேண்டும் என்பதற்காக 10-ம் வகுப்பு மாணவனை டுடோரியலில் சேர்த்துவிட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை தொடர்ந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு அடுத்துள்ள மாதுரவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 43). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு
திருவேற்காடு, மாதுரவேடு கிராமத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் என் மகன் வெங்கடேசன் 4-ம் வகுப்பு முதல் தொடர்ந்து படித்து வருகிறான். தற்போது, 10-ம் வகுப்புக்கு வந்துள்ள என் மகனுக்கு கல்வி கட்டணமாக ரூ.28 ஆயிரம் பள்ளி நிர்வாகத்துக்கு செலுத்தியுள்ளேன். இந்த நிலையில், 10-ம் வகுப்பு பயிற்சி தேர்விற்காக என் மகன் திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டான். இதுகுறித்து நான் விசாரித்தபோது, என் மகன் கம்பர் டுடோரியலின் மூலம் 10-ம் வகுப்பு பொதுதேர்வு எழுத போகிறான் என்ற அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது.
டுடோரியலில் சேர்ப்பு
மேலும், என் மகன் 9-ம் வகுப்பின் தேர்ச்சியை நிறுத்தி வைத்துள்ளது போல் மாற்றுச்சான்றிதழை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில், என் கையெழுத்து போல் ஒரு கையெழுத்தும் போடப்பட்டுள்ளது. இதை கொண்டு என் மகனை டுடோரியல் சென்டரில் பள்ளி நிர்வாகம் சேர்த்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தாளாளரிடம் கேட்டபோது, தனக்கு தெரியாமல், பள்ளியின் துணை முதல்வர் இவ்வாறு செய்துவிட்டார். இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கூறினார்.
இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி, உதவி கல்வி அலுவலர் ஆகியோருக்கு கடந்த மார்ச் 3-ந் தேதி புகார் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நோட்டீசு
மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், சரியாக படிக்காத மாணவர்களை டுடோரியலில் சேர்த்து விடுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் தகுந்த உத்தரவினை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜரானர். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக