மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம்நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது.
இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும், இறுதி பட்டியல் எப்போது வரும் என, தெரியாத சூழல் உள்ளது.
இது குறித்து, முதுகலை தேர்வர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர் நியமனவழக்குகளை, மாணவர்கள் கல்வி நலன் கருதி, விரைந்து முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்தின் அவசியத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக