தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களை உடனடியாக சேகரித்து வழங்க தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளிகளும், 8,000த்துக்கு மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30:1 என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான மாணவர் எண்ணிக்கை இருப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே செல்வதால் அப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பது வழக்கம்.
இப்பணியிடங்களை ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படும் "பணிநிரவல்" நடவடிக்கை இரு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. அதன் பின் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மீண்டும் 2013 செப்டம்பர் 1ம் தேதியன்று உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், பணிநிரவல் நடத்த சில மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது.
பொதுவாக பணிநிரவல் நடந்தால், நகர்ப்புறத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாயமாக இடமாறுதல் கிடைக்கும் என்பதால் பணிநிரவலை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. இதனால், சில ஆசிரியர் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டதால், அந்த சமயத்தில் ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்ற நோக்கில் கடந்த ஆண்டு பணிநிரவல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது, லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் மாதத்தில் பணிமாறுதல் கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால், புதிய ஆசிரியர் நியமனங்களும் தாமதமாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், பணிநிரவலை நடத்தி முடித்த பின், இடமாறுதல் கவுன்சலிங் மற்றும் பணிநியமனத்தை நடத்த தொடக்கக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 2013 செப்டம்பர் 1ம் தேதியில் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி மற்றும் பற்றாக்குறை ஆசிரியர்களின் விபரங்களை பள்ளியிலிருந்து சேகரிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒன்றிய அளவிலான தலைமை ஆசிரியர் கூட்டம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் நேற்று நடந்தது.
இந்த விபரங்கள் அனைத்தையும், மே 5ம் தேதிக்குள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தொகுக்கப்பட்டு, மே 7ம் தேதிக்குள் சென்னை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கவும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்ட உடன் பணிநிரவலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக