காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 70 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த ஆண்டு வரை இருபாலர் பள்ளியாக செயல்பட்டது. கடந்த ஆண்டு செய்யூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தனியாக கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது மாணவர்கள், மாணவிகளுக்கு என்று செய்யூரில் தனித்தனியாக அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மொத்தம் 181 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 50 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பு என்ற பெயரை பெற்றது. இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கென் தனிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால், கடந்த கல்வி ஆண்டில் இப்பள்ளியில் 75 மாணவர்கள் படித்தனர்.
அதே நேரம் ஆங்கிலம், கணக்கு, வேதியல், இயற்பியல், உயிரியல், வரலாறு, பொருளாதரவியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை உருவானது. இருந்த போதிலும் 75 மாணவர்கள் தேர்வு எழுது 73 பேர் தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளது. இது 97 சதவீத தேர்ச்சியாகும். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதல் இடத்தை இப்பள்ளி பெற்றுள்ளது. மாணவர்களின் தேர்ச்சிக்கு துணையாக இருந்த தலைமை ஆசிரியை எஸ். தங்கபாய் மற்றும் ஆசிரியர்களை ஆட்சியர் கா. பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோர் பாராட்டினர்.
மாணவர்களின் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம். பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் லாவகமாக கையாண்டார். அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பி வைத்து அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். அடுத்த கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பினால் நிச்சயம் 100 சதவீதம் தேர்ச்சி சாத்தியமாகும் என்றார் அவர்.
செய்யூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 95 மாணவிகளில் 87 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக