தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.
இது தவிர அரசு மருத்துவ கல்லூரிகளில் 310 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தன. சென்னை மருத்துவ கல்லூரியில் 85 இடங்களும், ஸ்டான்லி மத்துவ கல்லூரியில் 100 இடங்களும், சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் 25 இடங்களும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் தலா 50 இடங்களும் கூடுதலாக உருவாக்கப்பட்டன.
இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த 310 இடங்களும் கூடுதலாக கிடைத்தன. கூடுதலாக அனுமதிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர்ந்து எம்.சி.ஐ. ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெற்ற கூடுதல் சீட்டுகளை தக்க வைத்துக் கொள்ள மருத்துவ கல்வி இயக்ககம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எம்.சி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்து அரசு மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்து விட்டு சென்றுவிட்டனர். மாணவர்களுக்கு போதுமான வசதிகள், பரிசோதனை கூடங்கள், துறைகள், பேராசிரியர்கள், படுக்கைகள், நர்சுகள் போன்றவை இருக்கிறதா என்று ஆய்வை முடித்து சென்றனர்.
இது தொடர்பான அறிக்கை இதுவரை வரவில்லை. ஆனால் இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவ கல்வி இயக்ககம் செய்து வருகிறது. புதிய மருத்துவ கல்லூரியோ, கூடுதல் இடங்களுக்கு இந்த வருடம் வாய்ப்பு இல்லை. என்றாலும் கடந்த ஆண்டு கூடுதலாக பெற்ற 310 எம்.பி.பி.எஸ். இடங்களும் இந்த ஆண்டு கலந்தாய்வில் சேர்க்கும் வகையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமியிடம் கேட்டதற்கு, கடந்த ஆண்டை போல இந்த வருடமும் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். கலந்தாய்வு- தொடங்குதற்கு முன்பாக அதற்கான அறிக்கை எம்.சி.ஐ.யிடம் இருந்து வந்துவிடும்.
ஜூன் மாதத்தில் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே கலந்தாய்வின்போது கடந்த ஆண்டு பெற்ற கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் இடம்பெறும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக