லேபிள்கள்

21.5.14

ஓய்வூதியம் பெறும் வயதானவர்கள் பல மணிநேரம் காத்திருந்து அவதி

ஓய்வூதியம் பெறுவோர், தங்களது, 'லைவ்' சான்றிதழை புதுப்பிப்பதற்காக, நேற்று, சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் அலுவலகத்தில் குவிந்தனர்.
உடனுக்குடன், சான்றிதழை புதுப்பித்து தராததால், காலை முதல், பல மணிநேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். மாநில அளவில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை, கல்லுாரி சாலையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் தொடர்பான பணிகளுக்கு, இங்கு வருகின்றனர். ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, தாங்கள் உயிருடன் உள்ளோம் என்பதற்காக, 'லைவ்' சான்றிதழ் பெற வேண்டும். ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றை, ஓய்வூதிய அலுவலகத்தில் ஒப்படைத்தால், 'லைவ்' சான்றிதழை, அதிகாரிகள் வழங்குவர். இதை பெற்றால் தான், ஓய்வூதியம் பெற முடியும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில், இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர், சென்னை வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான வசதி கள், வளாகத்தில் இல்லை. போதுமான குடிநீர் வசதி கிடையாது. குறிப்பாக, கழிப்பறை வசதி இல்லை. காலையில் வந்தால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நடக்க முடியாதவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று, 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், வேலை முடிய, பகல், 2:00 மணிக்கும் மேலாக காத்திருந்து, பலரும் அவதிபட்டனர்.
இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது: ஐநுாறு பேரையும், இன்றே வர வேண்டும் என, நாங்கள் கூறவில்லை. 'மூன்று மாதங்களில், எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என, தெரிவிக்கிறோம். இருக்கின்ற ஊழியர்களை வைத்து, முடிந்த அளவிற்கு வேகமாக பணியை செய்கிறோம். குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக