லேபிள்கள்

21.5.14

ரூ.67 லட்சம் கல்வி உதவித்தொகை மோசடி 77 தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரூ.67 லட்சம் மோசடி விவகாரத்தில் சஸ்பெண்டாகி பணியில் சேர்ந்த 77 தலைமையாசிரியர்களிடம் நேற்று விசாரணை தொடங்கியது.நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரக்குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையில் ரூ.67 லட்சம் மோசடி நடந்திருப்பது கடந்த 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  பள்ளிக்கு வரும் அனைத்து
குழந்தைகளும் சுகாதாரக்குறைவான தொழில்செய்யும் பெற்றோரின் குழந்தைகள் என பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை பெறப்பட்டுள்ளது. இதை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலக புரோக்கர்கள் சுருட்டிக் கொண்டது அம்பலமானது.இதையடுத்து, இந்த மோசடிக்கு துணை போன அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வந்த 77 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இது தொடர்பாக 10 தலைமை ஆசிரியர்கள் மீது காவல்நிலையங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து, 7 மாதங்களுக்கு பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டு, வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இருந்து வந்தது.இந்நிலையில் இம்மாதத்தின் இறுதியில் பல தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற  உள்ளனர். எனவே, மோசடியில் ஈடுபட்ட தலைமையாசிரியர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என  ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதைதொடர்ந்து சஸ்பெண்டாகி பணிக்கு சேர்ந்த 77 தலைமை ஆசிரியர்களிடம், விசாரித்து அறிக்கை அளிக்க சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கத்துக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் நேற்று தனது விசாரணையை துவக்கினார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில் உள்ள அறை யில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. நேற்று நாமக் கல், புதுச்சத்திரம், சேந்தமங் கலம், திருச்செங்கோடு ஆகிய ஒன்றியங்களில் சஸ்பெண்டாகி பணிக்கு சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் விசாரித்தார். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில், அவர்கள் தெரிவித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விசாரணை இன்றும், நாளையும் தொடர்ந்து 67 பேரிடம் நடத்தப்படுகிறது. விசாரணையின் போது நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக