ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய விளைவுகளை அதிமுகவிற்கு ஏற்படுத்தும் என்று ஜேக்டோ மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.
6வது ஊதியக்குழுவில் உள்ள அனைத்து படிகளையும் தமிழக ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை தாய்மொழியாக தமிழ்வழி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஜேக்டோ மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி ஆசரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத முதல் வாரத்திலோ தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மேலும் 2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுவதோடு அதிமுக மீது அதிருப்தி ஏற்படுத்தும். அது மிகப்பெரிய விளைவுகளை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக