லேபிள்கள்

20.4.15

வரும் 27ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் சென்னையில் 1 லட்சம் பேர் பேரணி

முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில்நேற்று நடந்தது. மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்விபேசியதாவது: 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் பேரை திரட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தும். சத்துணவு ஊழியர் சங்கத்துக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி வட்ட கிளைகளில் ஆர்ப்பாட்டம், 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம் என்றார்.பின்னர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். எங்கள் சங்க உறுப்பினர்கள், அரசு ஊழியர் சங்கம் ஆதரவுடன் ஒரு லட்சம் பேரை திரட்டி வரும் 27ம் தேதி சென்னையில் பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை சென்னையை விட்டு வெளியேற மாட்டோம் என்றார்.

தமிழக போலீஸ் மீது புகார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி பேசும்போது, ‘உரிமைக்காக போராடும் சத்துணவு பெண் ஊழியர்களை நெஞ்சிலும், வயிற்றிலும் போலீசார் உதைப்பதும், லத்தியால் தாக்குவதும் தான் ஆட்சியின் லட்சணமா? சத்துணவு ஊழியர்கள் மனிதர்களா? மாடுகளா? போலீசார் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை தாக்கி உள்ளனர். தமிழக போலீசார் மீது ஐஎல்ஓவிடம் (சர்வதேச தொழிலாளர் அமைப்பு) புகார் தெரிவிப்போம். இதை அரசு ஊழியர் சங்கம் சும்மா விடாது’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக