காரைக்குடி அழகப்பா பல்கலையில், தேர்வே எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி பட்டத்தை திருப்பி அனுப்பி, தேர்வு எழுத அனுமதி கோரியுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வியில் எம்.பி.ஏ., (பேங்கிங் அன்ட் பைனான்ஸ்) இரண்டு ஆண்டு பாடப்பிரிவில், ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஸ்ரீஷா என்ற மாணவி 2012ல் சேர்ந்தார். பின், முதலாமாண்டு பாடங்களுக்குரிய தேர்வு எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். இவர் இரண்டாம் ஆண்டிற்குரிய தேர்வு கட்டணத்தை செலுத்தி, உடல் நலமின்மையால் தேர்வு எழுதவில்லை.
கடந்த ஜனவரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இவர் பட்டம் பெற தகுதியுடையவர் என்று பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, தபாலில் பட்டம் அனுப்பப்பட்டது. அந்த பட்டத்தை பார்த்த மாணவி, “தேர்வே எழுதாத தனக்கு பட்டம் வழங்கியிருப்பதாக கூறி, பட்டத்தை வேண்டாம்” என மறுத்து, பல்கலை கழகத்துக்கு திருப்பி அனுப்பி விட்டார். அதுமட்டுமன்றி அடுத்து வரும் தேர்வை தான் ’எழுத அனுமதி தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் கூறும்போது: மாணவி பட்டத்தை திரும்ப அனுப்பியுள்ளார். மாணவி தேர்வு எழுதியதாக கூறப்படும் மையத்தில் உள்ள, வருகை பதிவேட்டை விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக