லேபிள்கள்

20.4.15

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரேநேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது. 

திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்குநடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக