லேபிள்கள்

21.4.15

ஆசிரியர் கல்வி விண்ணப்பம் பெறுவதில் தாமதம்: முற்றுகையிட்ட மாணவர்கள் மீது போலீஸ் தடியடியால் பரபரப்பு

ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு விண்ணப்பம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு மையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தமிழகத்தில் தொடக்ககல்வி ஆசிரியர் பட்டய தேர்வு(டிடிஎட்) மாணவர்களுக்கான தேர்வு அடுத்தமாதம் நடக்கிறது. இதற்காக அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்வு எழுதுவோர் விண்ணப்பம் செய்ய சிறப்பு மையம் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு  காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது.


விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என்பதால் நேற்று விண்ணப்ப மையத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களோடு  குவிந்தனர். ஆனால் அங்கு 2 ஊழியர்கள் மட்டுமே விண்ணப்பங்களை வாங்கி கணினியில் பதிவு செய்து வந்தனர். இதனால் பெரும்பான்மையான மாணவர்கள், விண்ணப்பங்களை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து  மாணவ, மாணவிகள் விண்ணப்ப மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் செல்லாததால் லேசான தடியடி நடத்தினர். பின்னர் மாணவர்கள் சிதறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக