லேபிள்கள்

4.5.15

1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி, கூடார வகுப்புகள்: வகுப்பறை, கழிப்பறை, ஆய்வக வசதி இல்லை

கடந்த ஆறு ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட, 1,250 உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிப்பறைகள் கட்ட நிதியின்றி, மாணவ, மாணவியர் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். 

தமிழகத்தில், ஆண்டுதோறும், பட்ஜெட்டின் போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில், தரம் உயர்த்தப்பட்ட, 1,250 பள்ளிகள், பெயரளவில் உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படுவதால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும், போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய கட்டடங்கள், வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி இல்லை. கடந்த 2009 - 10ல், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்ட, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம், தலா, 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 


நேரடி அதிகாரம் :

இந்த நிதியில், 11 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்டும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடி அதிகாரம் வழங்கப்பட்டது.ஆனால், இந்த நிதி போதாது என, தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு துறைகள் மூலம் கட்டுமான பணிகளை நடத்த கோரிக்கை விடுத்தனர். அதனால், புதிய கட்டடம் கட்டும் பணியை, பொதுப்பணித் துறைக்கு வழங்க முடிவானது.அ.தி.மு.க., ஆட்சி வந்தபின், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை எனக் கூறி, புதிய கட்டட பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஒதுக்கப்பட்ட நிதியும் இலவச திட்டங்களுக்கு சென்றதால், புதிய கட்டடம் என்பது, உயர்நிலைப் பள்ளிகளுக்கு கனவாகவே மாறி விட்டது.

இதனால், ஆறு முதல், 10 வரையிலான வகுப்புகளுக்கு, 1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி மற்றும் கூடாரங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன; ஆய்வக வசதியும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, பாதுகாப்பான தண்ணீர் வசதியுடன் கூடிய, கழிப்பறைகள் கட்டாயம் தேவை என்ற நிலையில், இந்த பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் இன்றி, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைக்கான புதிய கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரக்கோரி, ஆறு ஆண்டுகளாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். 

கிணற்றில் போட்ட கல்:
ஆனால், இக்கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, விரைவில் புதிய கட்டடம் கட்ட, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக